×

ஜம்மு – காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!!

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்புகளை வழங்கியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் மற்றும் சூரிய காந்த் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பெரும்பான்மை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், “சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம். 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. ஜம்மு – காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இல்லாமல் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

ஜம்மு – காஷ்மீரின் அரசியல் சட்டத்தில் இறையாண்மை குறித்து எதுவும் கூறவில்லை. ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் சேரும் போது, அதன் இறையாண்மை மொத்தமாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டது. ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் சேரும் போது, அதற்கு தனி இறையாண்மை வழங்கப்படவில்லை. 370வது பிரிவை ரத்து செய்ய ஜம்மு – காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை. ஜம்மு – காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும். கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஜம்மு – காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜம்மு – காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jammu and Kashmir ,New Delhi ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...